நாகசக்தி அம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா; குவிந்த பக்தர்கள்
ஆலாந்துறை நாகசக்தி அம்மன் கோவிலில் உள்ள ராகு கேது ஸ்தலத்தில், ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது.
ஆலந்துறை, பெருமாள் கார்டனில் ஸ்ரீ நாகசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான விருட்சங்கள் அமைந்துள்ள வனத்தில், ராகு கேது பகவான்கள் துணைவியாருடன் தனி சன்னதியில் உள்ளனர். இந்தாண்டின் ராகு கேது பெயர்ச்சி நேற்று நடந்தது. இதில், ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகினர். இதனையடுத்து, இக்கோவிலில், நேற்று, மாலை, 3:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. இவ்விழாவில், பச்சாபாளையம் ஸ்ரீராம் சிவாச்சாரியார் தலைமையில், விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், ராகு கேது கலச ஆவாஹனம், 108 கலச பரிகார வேள்வி, ருத்ர அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ராகு-கேது பகவான்களுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், கோவிலின் நிறுவனர் ரங்கராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.