தஞ்சாக்கூரில் ராகு, கேது பெயர்ச்சி விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் நடைபெற்ற ராகு,கேது பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர்,ஜெயம் பெருமாள், ஜெகதீஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன், 18 சித்தர்கள் அடங்கிய கோயில் தெப்பக்குளத்தில் ராகு,கேதுக்கு சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ராகு,கேது பெயர்ச்சியை முன்னிட்டு தெப்பக்குளத்திற்கு முன்பாக யாகம் வளர்க்கப்பட்டு,கூடலூர் மகா சக்தி பீடம் தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள் யாக பூஜைகளைம், யாக கேள்விகளையும் நடத்தி ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத்தொடர்ந்து கோயில் பூசாரி பாலசுப்பிரமணியன் ராகு,கேதுக்கு சந்தனம்,பால்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு தீபாராதனைகள் செய்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் துபாய் காந்தி மற்றும் தஞ்சாக்கூர் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.