ஆல்கொண்டமால் திருவிழா சுவாமி வீதி உலாவுடன் நிறைவு
ADDED :14 hours ago
குடிமங்கலம்: பொங்கலையொட்டி ஆல்கொண்டமால் கோவிலில் நடந்த திருவிழா, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கலையொட்டி மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா 16ம் தேதி துவங்கி நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து சலகெருதுகள் அழைத்து வரப்பட்டு, இரவு வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். கோவில் வளாகத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் பொழுது போக்கி சென்றனர். நேற்றுமுன்தினம் இரவு, சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது.