காளியாபுரத்தில் கால்நடை செல்வம் பெருக உருவார வழிபாடு
பொள்ளாச்சி: ஆனைமலை, காளியாபுரத்தில் மாட்டேகவுண்டன் கோவிலில், கால்நடை செல்வம் பெருக உருவாரம் வைத்து வழிபாடு நடந்தது.
ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில், மாட்டேகவுண்டன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பூ பொங்கல் அன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதே போல் மாட்டேகவுண்டன் கோவிலில், பூப்பொங்கல் தினத்தில் காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, விவசாயிகள் தங்களது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்கவும், கால்நடை செல்வம் பெருகவும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். விவசாயிகள் பலர் ஆடு, கோழி, மாடு போன்ற உருவாரங்களை காணிக்கையாக செலுத்தி, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து சென்று, வீடுகளிலும், ஆடு, மாடுகளை அடைக்கும் பட்டிகளிலும் தெளித்தனர். பூ- பொங்கலையொட்டி மாடுகளுக்கு அலங்கார பூஜைகள் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கால்நடைகளின் காவல் தெய்வமாக மாட்டேகவுண்டன் சுவாமி உள்ளார். கடந்த ஆண்டின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், காணிக்கையாக சுமார், 600 முதல் 700 உருவாரங்களை செலுத்தினர். மேலும், ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளை கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இந்த ஆண்டும் வேண்டுதல்கள் வைத்துள்ளோம், என்றனர். கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் மால கோவிலில் காணும் பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க, கோவில் வளாகத்தின் முன் கால்நடை உருவாரம் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் துவங்கியதில் இருந்து, மூன்று நாட்களுக்குள் மாடு கன்று ஈன்றால் அந்த கன்று சுவாமிக்கு நேர்ந்து விடுவது வழக்கம். சிங்கையன்புதூர், கல்லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுவாமிக்கு நேர்ந்து விடப்பட்ட மாடுகளை அலங்காரம் செய்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலை அழைத்து வந்து விவசாயிகள் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் வள்ளி கும்மியாட்டம், ராட்டிணம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தது.