கோவைக்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்
பேரூர்: பேரூரில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான இடத்தில், புதிய கட்டட பணியை, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார்.
திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூரில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு நேற்று காலை வந்தார். ஆதீனத்திற்கு கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் ஆதீனம், பழமை வாய்ந்த சிவஞான பிள்ளையாரை வழிபாடு செய்தார். அதனைத்தொடர்ந்து, மடத்திற்கு சொந்தமான தோட்டத்தில், மரம் நடவு செய்தார். அங்கு, நுழைவாயில் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணியை, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டார். மாலை, 6:00மணிக்கு, மடத்தில் உள்ள குருமூர்த்த கோவிலில், பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.