10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்மலையில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை கோயில் சித்திரை திருவிழா 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது.
இங்குள்ள குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்ற நாதர் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டதும் ஆகும். இக்கோயிலின் சித்திரை திருவிழா கடைசியாக 2012 ல் நடந்த நிலையில் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடந்தது. 2019 ல் கும்பாபிஷேகம் நடந்தாலும், தொடர்ந்து 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இன்று இக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10:00 மணிக்கு திருக்கொடுங்குன்ற நாதர் சன்னதி முன்பாக உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 10 நாள் திருவிழாவின் போது சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். 2ம் நாள் திருஞானசம்பந்த சுவாமிகள் விழா, 5ம் நாள் திருக்கல்யாணம், 7ம் நாள் வள்ளல் பாரி விழா, 9ம் நாள் தேரோட்டம் நடக்கிறது.