திருப்புல்லாணி சக்கர தீர்த்தம் அர்த்த மண்டபத்தில் ராமாயண வேள்வி
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்தம் அர்த்த மண்டபத்தில் கடந்த ஏப்., 6 முதல் ஏப்., 9 வரை நான்கு நாட்களுக்கு ஸ்ரீமத் ராமாயண மகா வேள்வி நடந்து வருகிறது. ஐதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை கொண்ட கோயிலை உருவாக்கிய திரிதண்டி ஸ்ரீராமானுஜர் சின்ன ஜீயர் தலைமையில் பூஜைகள் நடந்து வருகிறது.
ஸ்ரீமத் அகோபில மடம் சுவாமிகள் முன்னிலை வகித்தார். இன்று காலை 7 மணி முதல் துவங்கிய பூஜையில் புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டு தொடர்ந்து திவ்யபிரபந்த பாடல்கள் பாடப்பட்டு வேள்வி நடந்தது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான வெளியூர் பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். சகஸ்ரநாம பாராயணம், ராமாயண இதிகாச வேள்வி பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல்அலுவலர் கிரிதரன், பேஷ்கார் கண்ணன், ஜெயராம் பட்டர், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ரெகுபதி ஐயங்கார், கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் எம்பெருமான் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.