உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது

சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது

சின்னமனூர்: சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 14 ல் திருக்கல்யாணம், 15 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

சின்னமனூரில் பழமையும், புராதானமும், பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும், கொரோனா தொற்று காரணமாக 2019 க்கு பின் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது. கடந்த ஏப். 2ல் பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. நேற்று காலை 8.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிவாச்சாரியார்களால் மேற்கொள்ளப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். சின்னமனூர் நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். வித விதமான அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வருவார்கள். ஏப். 14 ல் காலை 10 முதல் 11 மணிக்குள் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும், தொடர்ந்து ஏப்.15 ல் காலை சுவாமியும், அம்மனும் திருத்தேரில் எழுந்தருளுவார்கள். அன்று மாலை தேரோட்டம் நடைபெறும். முதல் நாள் வடக்கு ரதவீதியில் துவங்கி செக்காமுக்கில் நிறுத்தப்படும். ஏப்.16 காலை மீண்டும் தேரோட்டம் துவங்கி கிழக்கு ரதவீதியில் கண்ணாடி கடை சந்திப்பில் நிறுத்தப்படும். மாலை மீண்டும் தேரோட்டம் துவங்கி தெற்குரத வீதி, மேற்கு ரதவீதிவழியாக வந்து நேர் நிலையில் நிறுத்தப்படும். தொடர்ந்து ஏப்.24 வரை மண்டகப்படி நடைபெறும். ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையதுறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !