செம்பொற்சோதி நாதர் கோவிலில் நந்தி பெருமானுக்கு திருக்கல்யாணம்
கள்ளக்குறிச்சி : செம்பொற்சோதி நாதர் கோவிலில் நந்திபெருமான் - சுயசாம்பிகை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி, சாமியார்மடம், செம்பொற்சோதிநாதர் கோவிலில், பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தையொட்டி நந்தி பெருமானுக்கும் - சுயசாம்பிகை சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
இதனையொட்டி சுவாமிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகபெருமான் வழிபாடு நடந்தது. சுந்தரேச பெருமாள் - மீனாட்சியம்மை முன்னிலையில் தமிழ்முறைப்படி யாகம் நடத்தி, திருமுறைகள் பாடி, கயிலை வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பக்தர்கள் ஹரஹர சிவசிவ, ஓம்நமச்சிவாய மந்திரங்கள் முழங்க தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாதவர்கள் நந்திபெருமானின் திருக்கல்யாணத்தை பார்த்து தரிசனம் செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐ தீகம். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நாச்சியப்பன் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.