உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 550 கோவில்களில் கணினி வழி கட்டண சேவை திட்டம் துவக்கம்

550 கோவில்களில் கணினி வழி கட்டண சேவை திட்டம் துவக்கம்

சென்னை : தமிழகத்தில் 550 கோவில்களில், கணினி வழியாக, 255 கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.

கோவில்களில் கட்டண ரசீது முறையில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், பக்தர்கள் வசதி கருதியும், கணினி வழி கட்டண சேவைகள் வழங்கும் திட்டம், அறநிலையத்துறை சார்பில் நேற்று துவக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், என்.ஐ.சி., என்ற தேசிய தகவல் மையம் வாயிலாக நவீன தொழில் நுட்பத்தில், ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு கோவிலுக்கும், தனித்தனி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், அந்தந்த கோவில் சொத்துக்கள், விலை மதிப்பற்ற விக்கிரகங்களை பதிவேற்றம் செய்து, ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, கோவில்களில் உள்ள கட்டண சேவைகள் அனைத்துக்கும், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கணினி வாயிலாக ரசீதுகள் பெறலாம். இதற்கு அறநிலையத்துறை வலைதளமான, www.tnhrce.tn.gov.inல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அதிக பக்தர்கள் வருகை தரும், 550 பிரதான கோவில்களில், அர்ச்சனை, அபிஷேகம், சகஸ்ரநாமம், வாகன பூஜை, திருமணம், சந்தனக்காப்பு, நெய்தீபம், பரிகாரம் உள்ளிட்ட 255 வகையான சேவைகளை, இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். கோவில்களின் கட்டண சீட்டு மையங்களில், கணினி வாயிலாகவும் ரசீதுகள் வழங்கப்படும். அந்த ரசீதுகளில், கியூ.ஆர்., எனப்படும் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும். அதன் வாயிலாக பக்தர்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர்.கட்டணத்தை செலுத்தியதும், ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; ரசீது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். சேவைக் கட்டண ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின், அதை கமிஷனர் அலுவலக உதவி மையத்தின், 044 - 2833 9999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !