சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோவில் தெப்பத்தின் சுவர் இடியும் அபாயம்
சாத்துார்: சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில் தெப்பத்தின் சுவரில் வளரும் மரம் மற்றும் செடிகளால் சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது .சாத்துார் பகுதியினர் சிவன் கோயில் என அழைக்கின்றனர். மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு தெப்பம் உள்ளது. கருங்கல் கொண்டும் தெப்பம் கட்டப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்த போது தெப்பத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது . இதன் பின்னர் சிறிய பராமரிப்பு பணிகளை சிவபக்தர்கள் மேற்கொண்டு வந்தனர். 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பராமரிக்கவில்லை. பழமையான தெப்பத்தின் சுவர்களில் அரசமரம், வேப்பமரம் முளைத்து வருகின்றன. இதனால் சுவர் விரிசல் விடுவதோடு விரைவில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான தெப்பம் பராமரிப்பின்றி காணப்படுவதால் சிவ பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தெப்பத்தின் சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை யும் மற்றும் மரங்களையும் அகற்றுவதோடு சுவர்களையும் பலப்படுத்த வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.