கொங்க குலகுருக்களின் சிருங்கேரி ஸ்வாமிகள் தரிசனம்
தமிழகத்தில் உள்ள பல ஜாதியினருக்கும் குறிப்பாக கொங்க வேளாளக் கவுண்டர்கள் குலத்தினருக்கு குலகுருவாக அனேக மடங்களும், ஆதீனங்களும் உள்ளன. அவற்றில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தினை தங்களது குருபீடமாக வணங்கிவரும் ஆதீனங்களும் அடக்கம். இதில் 14 ஆதீனத்தினர், சிவகிரி ஆதீன கர்த்தர் தலைமையில் சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸன்னிதானம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸன்னிதானம் அவர்களை நேற்று சிருங்கேரியில் தரிசனம் செய்து ஆசி பெற்றனர்.
சிருங்கேரி சாரதாபீடத்தில் 12வது பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகளால், 14ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட விஜய நகர சாம்ராஜ்யமானது தென்னிந்தியா முழுவதும் ஆட்சி நடத்தியது. தமிழகத்தில் கிருஷ்ணராயபுரம் போன்ற பெயரில் ஊர்கள் இருப்பது இதற்கு சான்று. அவரது காலத்தில் தென்னிந்தியாவில் பல கோவில்களுக்குபுனருத்தாரணமும்,பல மடங்களுக்கும், ஆதீனங்களுக்கும்மான்யங்களும் அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கொங்க தேச மற்றும் இதர தேச குலகுரு மடங்கள் பல நூறு வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவர்களை குலகுருக்களாக கொண்ட கவுண்டர்கள் சமூகத்தினரைத் தவிர கொங்க செட்டியார்கள், ஸ்தலத்து கணக்கு பிள்ளைகள், பிள்ளைமார்கள், வேட்டுவர்கள், சிவாச்சார்யார்கள், குலாலர்கள்,கொங்க மூப்பர், மதுரை, பாண்டி நாடார்கள், முதலியார்கள், பண்டாரங்கள், தேவர்கள், தெலுங்கு கோமட்டி செட்டியார்கள், பனிரெண்டாம் செட்டியார்கள், முக்குலத்தோர்கள், செளராஷ்டிரர்கள், நாயக்கர்கள், வன்னியர்கள், கற்பூர செட்டியார்கள், உப்பிலி நாயக்கர்கள் போன்ற அனைத்து ஜாதியினரும் உண்டு.
ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள பல பிரிவுகளும், கூட்டங்களும் குடிகள், காணி, நாடு என்ற அடிப்படையில் மிக நேர்த்தியாக வகுக்கப்பட்டு, அந்தந்த ஆதீனங்களை குலகுருவாகக் கொண்டுள்ளனர். அனைவரும் சிவ பூஜை செய்ய முடியாத காரணத்தால் குலகுருக்கள் ஒவ்வொருவரும் தங்களது சீடர்களின் குடும்ப நன்மைக்காக தாமே ஆத்மார்த்த சிவபூஜையினை செய்துவருகிறார்கள்.இவர்கள் தங்களது ஆத்மார்த்த பூஜையுடன் அனைத்து இடங்களுக்கும் சஞ்சாரம் செய்து, ஆங்காங்கே இருக்கும் சீடர்களுக்கு உபதேசம் செய்வது, ஆசீர்வாதம், பிரசாதம் வழங்கி வாழ்த்துவது போன்ற நடைமுறைகள் இருந்தன. சீடர்களும் இதற்காக சஞ்சார காணிக்கை, மாங்கல்ய காணிக்கை போன்று அளித்து ஆதரித்தனர். ஒவ்வொரு பிரிவினருக்கும், அவர்களது குல தெய்வத்திற்கும் தனித்தனி சம்ப்ரதாயம் இருக்கின்றன. இதனை தெரிந்து வழி நடத்துபவர் அந்தந்த குலகுருவே ஆவார். தவிர குடும்பத்தில் நடக்கும் அனைத்து விசேஷங்ககளுக்கும் குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக குலகுருவுக்குத்தான் பத்திரிகையும் காணிக்கையும் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு ஆதீனத்திடமும் 50 தலைக்கட்டுக்கான காணிக்கை விபரங்கள் இன்றும் உள்ளன.
ஆனால் தற்காலத்தில் இந்த வழக்கங்கள குறைந்து, சீடர்களின் ஆதரவின்றி பல ஆதீனங்களும், குலகுருக்களும் சிரமத்தில் உள்ளனர். குல தெய்வத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குலகுருவுக்கு அளிக்கப்படுவதில்லை போன்ற விபரங்களை சுவாமிகளிடம் சமர்ப்பித்தனர்.
ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் தமது ஆசி உரையில் கூறியதாவது: இதன்பின் சிவகிரி ஆதீனம் கூறியதாவது ‘ எங்களது ஆதி குருவான சிருங்கேரி ஸ்வாமிகள் அவர்களை தரிசனம் செய்ய வேண்டும் என நீண்ட நாள் அவா இருந்தும் அது ஏனோ அமையவில்லை. தற்போது ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தால் நிறைவேறியுள்ளது.சிருங்கேரி ஆசார்யார்களை தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றதை நாங்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்.குலகுரு மடங்களனாது அபிவிருத்தியாகவும், எங்களது தர்ம பிரச்சாரம் நன்கு நடைபெறவும், சீடர்களின் முழு ஆதரவானது கிடைக்கப் பெறவேண்டும் எனவும், அனைவரதுசந்ததியினரும்இந்தஸம்ப்ரதாயத்தைதொடர்ந்துகடைப்பிடித்துவரவேண்டும் என ஸ்வாமிகள் ஆசீர்வதித்துள்ளது எங்களுக்கு மிகுந்த மன நிறைவினைத் தருகிறது. அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நமஸ்காரங்களையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்’ என்றார். அவரவர்கள் குலகுருக்களுக்கு உண்டான மரியாதையினையும், ஆதரவும் கொடுத்து வந்ததினால்தான் சமூகங்களும் உயர்ந்து, பண்பட்டு வளர்ந்து வந்துள்ளன; ஆதீனங்களூம் சிறப்பாக இயங்கின. அந்த ஸம்ப்ரதாயம் மீண்டும் வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து குலகுருக்களுக்கும் அவரவர் மடத்தின் பெயர் பொறித்த ஆசீர்வாத பத்திரம், பொன்னாடை மற்றும் மந்த்ராக்ஷதைகள் ஆகியவற்றை சுவாமிகள் அளித்து ஆசீர்வதித்தார். இரவில் நடந்த ஸ்ரீ சந்த்ரமெளலீஸ்வரர் பூஜையையும் குலகுருக்கள் தரிசித்தனர். இன் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் உபதலைவர் பேராசிரியர் கனக சபாபதி,சுதேசி ஜாக்ரன் மஞ்சின் அகில இந்திய அமைப்பாளர் மதுரை ஆடிட்டர் சுந்தரம், ஆடிட்டர் ராமனாதன், காடையூர் கொங்க கோசாலை சிவகுமார் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.