உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பொலிவுடன் பச்சையம்மன் கோவில்: கும்பாபிஷேக பணிகள் ’விறுவிறு’

புதுப்பொலிவுடன் பச்சையம்மன் கோவில்: கும்பாபிஷேக பணிகள் ’விறுவிறு’

உத்திரமேரூர்:சாத்தணஞ்சேரி பாலாற்றங்கரையோரம், புதுப்பொலிவுடன் பச்சையம்மன் கோவில் கட்டப்படுவதோடு, ஆஞ்சநேயர், பைரவர், தட்சணாமூர்த்தி என 16 சுவாமிகளுக்கு தனி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், பாலாற்றங்கரையோரம் சாத்தணஞ்சேரி உள்ளது. இக்கிராமத்தில் கன்னியம்மன் கோவில், விட்டில்ராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், விநாயகர் கோவில் என, திசைக்கு ஒன்றாக, ஊரைச் சுற்றி பல கோவில்கள் உள்ளன.அதிலும், பாலாற்றங்கரை மீதுள்ள பச்சையம்மன் கோவில், மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது.

குழந்தையின்மை, திருமண வரம், மனநிலை பாதிப்பு, தீராத நோய் போன்ற பிரச்னைகளுக்கு, இக்கோவிலில் பிரார்த்தனை செய்தால் சிக்கல்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.சிறிய வடிவில் இருந்த பச்சையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரத்தோடு மண்டபம் ஏற்படுத்தி, பல்வேறு சுவாமி சிலைகள் அமைத்து வழிபட, கிராம மக்கள் தீர்மானித்தனர்.அதன்படி, புதிதாக கருவறை கோபுரம், ராஜகோபுரம், மகா மண்டபம் என கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.கோவில் வளாகத்திற்குள்ளே விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் முருகன், சிவதுர்க்கை, முடியால் அழகி, பூங்குழலி, நாகத்தம்மன், பைரவர், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி.சிவனுடன் பார்வதி, நவக்கிரகம், சப்த கன்னியர் என, காவல் தெய்வங்களாக சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட மதுரை வீரன், ஜடாமுனி, வாழ்முனி, செம்முனி, கருமுனி, தவமுனி, சங்குமுனி, நாகமுனி ஆகிய சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.சாத்தணஞ்சேரி கிராமத்தினர் கூறியதாவது:கடந்த 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த பச்சையம்மன் கோவிலில் வழிபாடு செய்தால், நன்மைகள் வந்து சேரும் என முன்னோர் காலம் தொட்டு வழிபட்டு வருகிறோம்.தற்போது, ஆஞ்சநேயர், பைரவர் என, மேலும் பல சுவாமிகளுக்கு மண்டபம் ஏற்படுத்தி, புதுப்பொலிவுடன் இக்கோவில் எழுந்தருள உள்ளது.கோவில் திருப்பணிகள் முடிந்ததும், வரும் ஜூன் 3ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !