அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்: மே 4ல் துவக்கம்
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் மே 4ம் தேதி சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்துவங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற சிறப்புகளை கொண்ட ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வரும் மே 4ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை, மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும்.விழாவின் முக்கிய நாளான மே 6-ம் தேதி அதிகார நந்தி சேவையும், 8 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 10 ம் தேதி திருத்தேர் விழாவும், 12 ம் தேதி கைலாச பர்வத உற்சவமும், பத்தாவது நாள் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அருளும் நிகழ்வும் நடக்கிறது. ஏற்பாடுகளைசெயல் அலுவலர் வெங்கடேசன், தலைமை சிவாச்சாரியார் சங்கர், விழா உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.