உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோற்சவம் : இணையதளத்தில் ‘அப்டேட் ’ இல்லாததால் குழப்பம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோற்சவம் : இணையதளத்தில் ‘அப்டேட் ’ இல்லாததால் குழப்பம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 13ல் துவங்கவுள்ள வைகாசி பிரம்மோற்சவம் குறித்து, கோவில் இணையதளத்தில் அப்டேட் செய்யாததால், நடப்பாண்டு பிரம்மோற்சவம் நடக்குமா என, வெளியூர் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பிரம்மோற்சவம் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, வெளிநாடு, பிற மாநிலம் மட்டும் மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், பஜனை கோஷ்டியினரும் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்து, உற்சவத்தை காண்பது வழக்கம்.தேரோட்டம்அதேபோல், வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், பூஜை பொருட்கள், பெண்களுக்கான பேன்ஸி பொருட்கள், சிறுவர்களுக்கான பொம்மை விற்பனை செய்யும் தற்காலிக கடைகளை, பிரதான சாலைகளில் அமைப்பர்.கடந்த, 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், வைகாசி பிரம்மோற்சவம் நடக்கவில்லை.

இரு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடக்காததால், பக்தர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.இந்நிலையில் இரு ஆண்டு இடைவெளிக்கு பின் வரும், 13ல் பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்குகிறது. இதையொட்டி கடந்த மாதம், 25ல் பந்தக்கால் நடப்பட்டது.பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டத்தையொட்டி, தேர் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உற்சவம் துவங்க 10 நாட்களே உள்ள நிலையில், கோவில் இணையதளத்தில் வைகாசி பிரம்மோற்சவ பத்திரிகை இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை. வரதராஜ பெருமாள் கோவிலுக்கு என, www.kanchivaradarajartemple.com என்ற இணையதளம் உள்ளது.கோரிக்கைஇதில் கோவிலின் ஸ்தல பெருமை, புராண வரலாறு, கோவில் அமைப்பு, திருவிழாக்கள், கோவில் கட்டண விபரம், கோவில் சொத்துக்கள், புகைப்பட தொகுப்பு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பிரம்மோற்சவ பத்திரிகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வரும், 13ல் துவங்க உள்ள நிலையில், கோவில் இணையதளத்தில், வைகாசி பிரம்மோற்சவம் 2019 என உள்ளது.நடப்பு ஆண்டுக்கான பத்திரிகை பதிவேற்றம் செய்யாததால், வெளியூர், வெளிநாட்டில் உள்ள பக்தர்கள், நடப்பாண்டு வைகாசி பிரம்மோற்சவம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, வரதராஜ பெருமாள் கோவில் இணையதளத்தில், நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவ பத்திரிகையை அப்டேட் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !