ஊட்டியில் குருசடி திருவிழா கோலாகலம்
ஊட்டி: ஊட்டியில் நடந்த குருசடி திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். ஆண்டு தோறும் குருசடி திருவிழா மே மாதம் 3ம் தேதி நடக்கிறது. நடப்பாண்டு திருவிழா கடந்த ஏப்., மாதம் 29ம் தேதி பங்கு தந்தை குரு அமிர்தராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். நாள்தோறும் கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது. இதில் பங்கு குருக்கள் ஏராளமானோர் பங்கேற்று நற்செய்தி வழங்கினார்கள். விழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணி முதல் 9.00 மணிவரை திருப்பலிகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு தேர் பவனி நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சிலுவை பவனியாக கொண்டு வரப்பட்டது. தேர்பவனி ஆலயத்தில் துவங்கி காந்தள் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. நீலகிரி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. இதில், மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், வட்டார குரு பெனடிக், ஆலய பங்கு குரு அமிர்தராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.