வினோத வழிபாடு : துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தேனி : ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் முதல் 2 நாட்கள் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் கடைசி நாளில் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இங்கு கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய மாமன்மார்கள், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.
அதன்படி நேற்று விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் மாமன்-மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வாறு செய்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும், பிரிந்து வாழும் உறவினர்களுக்கு இடையே உறவு வலுப்பெறும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.