ராமகிருஷ்ண மிஷன் 125ம் ஆண்டு தொடக்க விழா: கவுதமானந்தர் பங்கேற்பு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், இந்நிறுவனத்தின், 125ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் துணைச் செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் வரவேற்றார். ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தர், ராமகிருஷ்ண மடத்தின் துவக்க வரலாறு, சுவாமி விவேகானந்தர் இந்த மடத்தினை துவக்கி, தற்போது ராமகிருஷ்ண மிஷன் செய்துவரும் கல்வி மற்றும் பொது சேவைகள் குறித்து விளக்கினார். இந்திய சுதந்திர வரலாற்றில், ராமகிருஷ்ண மிஷன் பங்கு குறித்தும் எடுத்துக் கூறினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பங்கேற்று, அரசியலமைப்பின் முன்னுரையை படித்து, அதன்படி அனைவரும் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். எந்த ஒரு செயலிலும் விடாமுயற்சி, பயமற்று இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றார்.
தொடர்ந்து, ராமகிருஷ்ண மிஷன் குறித்த புத்தகத்தை சுவாமி கவுதமானந்தர், போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் ஆகியோர் வெளியிட்டனர். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர், ராமகிருஷ்ண மிஷனின், 125ம் ஆண்டு மற்றும், 75 ம் இந்திய சுதந்திரதினம் ஆண்டின் தொடர் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினார். விழாவில், வித்யாலய பணியாளர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர் நிகழ்ச்சியாக காந்தவயல், கோவிந்த நாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், பொது மருத்துவம், எலும்பு, இதய சிகிச்சை ஆகியவைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.