பெரிய கோபுரத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்வது தடுக்கப்படுமா?
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் வானுயர்ந்து நிற்கும் பெரிய கோபுரத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலூர் பழமையான நகரம். பல நூற்றாண்டுகள் பழமையான புராண இதிகாசங்களில் கூறப்பட்ட சிறப்புமிக்க உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு கிழக்குப் பகுதியில் 11 நிலைகளுடன் 192 அடி உயரமுள்ள பெரிய கோபுரம் வானுயர்ந்து காட்சியளிக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை, கலாச்சாரத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இக்கோபுரத்தின் நுழைவாயில் ஒருகாலத்தில் கோட்டையின் வாயிலாக இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழமை வாய்ந்த கோபுரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. படிக்கட்டுகளுடன் கூடிய கோபுரத்தின் தரைப்பகுதி மண் கொட்டி கால் காலப்போக்கில் மறைக்கப்பட்டது. இதனால் கோபுரத்தின் நிறைவு பகுதி சமதளமாக உள்ளது.
இதனை பயன்படுத்திக்கொண்டு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கோபுரத்தின் வழியாக பயணிக்கிறது. அதிர்வு ஏற்பட்டு கோபுரம் பழுதடைய வாய்ப்பு உள்ளது. மேலும் கோபுரத்தின் நுழைவு வாயிலில் கலைநயமிக்க சிலைகளை லாரிகள் உரசி செல்வதால் உடைந்து சிற்பம் கலையிழந்து காணப்படுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய அரசு தொல்லியல் ஆய்வுத் துறையின் அறிவுறுத்தலின்படி கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை கோபுரத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் லாரிகள் செல்லாத வகையில் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பையும் கனரக லாரி ஓட்டுநர்கள் உடைத்து கொண்டு உள்ளே சென்று உள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக இவ்வழியாக கனரக லாரிகள் நகருக்குள் சென்று கடைகளில் பொருட்களை இறங்கி வருகிறது. இதன் காரணமாக கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக மூன்று சக்கர வாகனங்கள் கூட செல்லாத வகையிலும், இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் மட்டுமே செல்லும் வகையில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டுமென பக்தர்களும், பழமை விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.