புதுக்கோட்டை ஜகந்மாதா ஸ்ரீ புவனேஸ்வரி அவதூத வித்யாபீடம் : புதிய கல்ஹார திருப்பணி
புதுக்கோட்டை : ஸத்குரு சாந்தாநந்த மஹாஸ்வாமிகளால் 1962ஆம் ஆண்டு ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் ஸ்தாபநம் செய்யப்பட்டது. அன்று, ஐந்து கோடி முறை ஹ்ரீம் என்ற ஏகாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்து, ஜகந்மாதாவின் தெய்வத் திருவுருவத்தைப் ப்ரதிஷ்டை செய்தார்கள்.
ஸத்குரு சாந்தாநந்த மஹாஸ்வாமிகள் தொடர்ந்து செய்துவந்த மிகவும் சக்திவாய்ந்த ஹோமங்கள், மந்திர உச்சாடனங்கள், ஜபங்களால் ஜகந்மாதா அளப்பரிய சக்தியுடன் அருள்பாலித்து வருகிறாள். பற்பல மகான்களும், அருளாளர்களும் வந்து ஜகந்மாதாவை தரிசித்து, இப்புனிதத் தலத்தின் மகிமையைக் கூட்டியுள்ளார்கள். பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகளும் ஒரு வருடம் தொடர்ந்து மங்கள சண்டி ஹோமம், 108 நாட்கள் க்ஷிப்ரப்ரஸாத மஹாகணபதி ஹோமம், பௌர்ணமி தோறும் சண்டி ஹோமம் போன்றவற்றை நடத்தி அருட்சக்தியை மென்மேலும் அதிகப்படுத்தியுள்ளார்கள். பூஜ்யஸ்ரீ சாந்தாநந்த மஹாஸ்வாமிகளின் ப்ரதம சிஷ்யரான பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த ஸ்வாமிகள் அவர்கள், கடந்த ஜூன் மாதம் புதுக்கோட்டை ஜகந்மாதா ஸ்ரீபுவநேச்வரி அவதூத வித்யாபீடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்று, பற்பல ஹோமங்களையும், ஜபங்களையும் சிறப்பாக நடத்திவருகிறார்கள்.
அவருடைய வழிகாட்டுதலில் வருகிற 2022 மே மாதம் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை, 108 நாட்கள் ஸ்ரீ ஐஸ்வர்ய பகளாமுகீ மஹாமந்த்ர பல்லவ ஸ்ரீ மங்கள சண்டீ மஹா ஹோமம் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை புனித நகரில், இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில், வீற்றிருந்து நமக்கெல்லாம் அருள்பாலித்து வரும் ஜகந்மாதா ஸ்ரீபுவநேச்வரிக்கு, புதிய கற்கோவில் உருவாக்க ஜகந்மாதாவின் திருவுளம் கனிந்துள்ளது. திருவையாறு ஸ்ரீதர்மஸம்வர்த்தினீ திருக்கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு, மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இந்த புதிய கல்ஹார வித்யாபீடம், சிற்ப சாஸ்த்ரத்தின் அடிப்படையில், பஞ்சவேதிகைகளால் ஆன தூண்களால், சிமெண்ட் மற்றும் கம்பிகள் இல்லாமல், கருங்கற்களை ஒருங்கிணைத்து அமையவுள்ளது. வித்யாபீடத்தில் 98 தூண்களும், 45 அடி உயர மூன்றடுக்கு ராஜகோபுரமும் அமைக்கப்படும்.
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அருட்தலைமையேற்று திட்டமிட்டு தொடங்கப்பட்ட இத்திருப்பணி, தற்போது பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த ஸ்வாமிகள் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் 14ஆம் தேதி (ஹேவிளம்பி, சித்திரை 31, ஞாயிறு) ச்ருங்கேரி ஜகத்குருக்கள் ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸந்நிதானம் அவர்களும், ஸ்ரீ ஸந்நிதானம் அவர்களும், தங்கள் விஜய யாத்திரையின் போது, புதுக்கோட்டையில் இந்தத் திருப்பணியை, தங்கள் திருக்கரங்களால் தொடங்கிவைத்தார்கள்.
திருப்பணியின் அவ்வப்போதைய நிலையை அவர்களிடம் கொண்டுசென்று, தொடர்ந்து அவர்களின் அருளாசிகளையும், ஆலோசனைகளையும் பெற்று பணிகள் நடைபெற்றுவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 12ஆம் தேதி (விகாரி, ஆவணி 26, வியாழன்) வாஸ்து பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி (விகாரி, தை 16, வியாழன்), சித்ர வாண சிலா ந்யாஸ பூஜை நடைபெற்று, ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி யந்திரம் & ஸ்ரீபுவநேச்வரீ யந்திரம் ஆகியவை முறையே ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வமிகள் அதிஷ்டானம் மற்றும் ஜகந்மாதா ஸ்ரீபுவநேச்வரி சந்நதிகளில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி (பிலவ, ஆடி 25, செவ்வாய்), பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த ஸ்வாமிகள் அவர்களின் தலைமையில், ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வமிகள் அதிஷ்டானம் மற்றும் ஜகந்மாதா ஸ்ரீபுவநேச்வரி சந்நதிகளின் நிலவுகால் ப்ரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி (பிலவ, ஆவணி 25, வெள்ளி), இரண்டு சந்நதிகளின் விதானம் – மேற்கூரை – அமைக்கும் பணி தொடங்கி, இரண்டு நாட்களில் நிறைவுபெற்றது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி (பிலவ, புரட்டாசி 4, திங்கள்), பெங்களூரு வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர், பரமபூஜ்ய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி (பிலவ, கார்த்திகை 24, வெள்ளி), ஜகந்மாதா ஸ்ரீ புவநேச்வரீ & ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் மூல ஸ்தான விமான திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக, அன்று அதிகாலை ஸ்ரீகணபதி, ஸ்ரீசுதர்ஸன & த்ருஷ்டி துர்கா-லக்ஷ்மி ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 09.00 முதல் 10.00 மணி வரை மூலஸ்தான விமான திருப்பணி தொடக்க பூஜை நடைபெற்று, பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ, ஸ்தபதி, அறங்காவலர்கள், ஸ்ரீகுரு சேவகர்கள் மற்றும் புதுக்கோட்டை அன்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட செங்கற்களை கோபுரம் அமைக்கும் பணிக்கு அற்பணித்தார்கள்.
வித்யாபீடத்தில் அமையவிருக்கும் 98 தூண்கள் ஒவ்வொன்றிலும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு சிற்பங்கள் - நான்கு திசைகளைப் பார்த்தவாறு – தூணின் கீழ்ப்பகுதியில் நின்ற நிலையில் நான்கும், நடுப்பகுதியில் அமர்ந்த நிலையில் நான்கும் – அமைக்கப்படும். ஸ்தபதியின் சிற்பச்சாலையில் தூண்களும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய விக்ரஹப் பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற்றுவருகிறது. திருப்பணி நடக்கும் இடத்தில், முறையாக ஒன்று கூட்டப்பட்டு, வித்யாபீடம் அமையப்பெறும். வேலைப்பாடுகள் மற்றும் மதிப்பின் அடிப்படையில் தூண்கள் நான்கு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தூண்களுக்கென நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் வித்யாபீட வளாகத்தில் பொறிக்கப்படும்.
22 முதல் வகைத் தூண்கள் முன் மண்டபத்தில் இடம்பெறும். 60 இரண்டாவது வகை தீபமங்கை தூண்கள் ப்ரஹார மண்டபத்தில் இடம்பெறும். 08 மூன்றாவது வகைத் தூண்கள் உயர்வான கூரைக்கானதாகவும், நான்காவது வகைத் தூண்கள் ராஜகோபுரத் தூண்களாகவும் இடம்பெறும். மூன்றாவது & நான்காவது வகைத் தூண்கள் ஜகந்மாதாவின் அவதாரங்கள் மற்றும் ஸ்ரீகுரு பரம்பரையினரின் விக்ரஹங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திருப்பணியிலும், வித்யாபீட பராமரிப்பிலும் பங்குபெற்று, பயனடைய, 18,000 பக்தர்களிடமிருந்து ரூ15,000/- வீதம் அருட்காணிக்கை என்ற திட்டத்தை வகுத்திருந்தார்.
உலகெங்கும் உள்ள பக்தர்களால், தங்களுக்குத் தெரிந்த மொழியில், பதினெட்டு கோடி முறை ஹ்ரீம் ஏகாக்ஷர மந்திரம் எழுதிய நோட்புக்குகள் ஜகந்மாதாவின் சந்நிதியில் ப்ரதிஷ்டை செய்யப்படும். ஜகந்மாதாவின் அருட்கடாக்ஷத்தாலும், சமஸ்த குரு பரம்பரையினரின் பரம அநுக்ரஹத்தாலும், பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அருளிச்செய்த திட்டத்தின்படி, இந்த கல்ஹாரத் திருப்பணி மிக நல்ல முறையில் நடைபெற்றுவருகிறது. வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி (சுபகிருத், தை 13, வெள்ளி) அன்று, மஹாகும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திருப்பணி குறித்த காலத்தில் நிறைவுபெற உங்கள் அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. 2017 ஆம் ஆண்டின் திட்ட அறிக்கையை, கடந்த இரண்டு ஆண்டுகளின் கொரோனா காரணமான பின்னடைவுகளையும், கல்ஹாரத் திருப்பணிக்கான மூலப் பொருட்கள், போக்குவரத்து, ஆட்கள் கூலி ஆகியவற்றின் விலை உயர்வுகளைக் கருத்தில் கொண்டும் ஒப்பிட்டுப் பார்க்கையில், கூடுதல் தொகை தேவைப்படும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பணி முழுமையடையத் தேவையான கதவுகளுக்கான மரம், மின் சாதனப் பொருட்கள், அதற்குண்டான கம்பிகள் பொருத்துதல், குடிநீர் ஏற்பாடுகள், பூஜைகளுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள், மஹாகும்பாபிஷேக & மண்டல பூஜை ஏற்பாடுகள், போன்றவற்றிற்கும் பக்தர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இத்திட்டத்தில் இணைந்தும், எற்கெனவே உதவி செய்தவர்கள் தங்கள் உற்றார் உறவினரையும் இந்த திருப்பணியில் பங்கு பெறச்செய்தும், ஜகந்மாதாவின் பேரருளுக்குப் பாத்திரராகும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் நன்கொடையினை, SRI SWAYAMPARAKASA AVADHUTHA SADASIVA TRUST என்ற பெயரில் காசோலை (அ) வரைவோலையாக, உங்கள் முழு விவரத்துடன்
ஸ்ரீ புவநேச்வரீ அவதூத வித்யாபீடம், கீழ 7ஆம் வீதி, புதுக்கோட்டை 622 001
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ஆன்லைன் வாயிலாக அனுப்ப வங்கி விவரம்:
Sri Swayamprakasa Avadhutha Sadasiva Trust (PAN No.AACTS8229H)
City Union Bank Limited, Pudukkottai 622 001
SB account no. 500101011586346
IFS Code: CIUB0000040
மேலும் விவரங்களுக்கு, sribhuvaneshwari@gmail.com / 98421 76359 / 99449 38390