உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரம் நிவர்த்தி : விநாயகருக்கு 324 இளநீர் அபிஷேகம்

அக்னி நட்சத்திரம் நிவர்த்தி : விநாயகருக்கு 324 இளநீர் அபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் வடிவாக உள்ள மும்மூர்த்திகள் விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு 324 இளநீர் அபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் வடிவாக விநாயகர் கோவில் இங்கு மட்டுமே அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியதாகும். இந்த விநாயகரை வழிபடுபவர்களுக்கு  மன அமைதியும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் அகலும், உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்பதும், திருமண பாக்கியம் கிட்டும்,  குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு மும்மூர்த்தி விநாயகருக்கு 324  இளநீர் அபிஷேகம் (ஒவ்வொரு விநாயகருக்கும் 108 இளநீர்), 51 லிட்டர் பால் மற்றும் 20 லிட்டர் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுவாமிராஜா குருக்கள் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !