உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் மரகத லிங்கம் கடத்த முயற்சி; ஹிந்து தமிழர் கட்சி குற்றச்சாட்டு

பழநி முருகன் கோயில் மரகத லிங்கம் கடத்த முயற்சி; ஹிந்து தமிழர் கட்சி குற்றச்சாட்டு

திண்டுக்கல் : பழநி முருகன் கோயிலில் உள்ள பச்சை மரகத லிங்கத்தை கடத்த முயற்சி நடப்பதால் அதை பாதுகாக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, திண்டுக்கல்லில் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ராமரவிக்குமார் கூறினார்.அவர் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் போகர் ஜெயந்தியன்று புவனேஸ்வரி அம்மனுக்கும், போகர் பூஜித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான பச்சை மரகத சிவலிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கும். மே 28 ல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

அன்று இரவு போகர் ஜீவசமாதி கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கோயில் பணியாளர்கள் சிலர், மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் தெய்வ திருமேனிகளை பாதுகாப்பாக வைக்கக்கூடிய அறையின் கதவுகளை எந்தவித முன்னறிவிப்பு செய்யாமல் சுத்தி, இரும்பு பொருட்களால் கதவை அகற்ற முயற்சித்துள்ளனர். கடத்தல் கும்பலுக்கு ஏதுவாக இவர்களே வழிவகை உருவாக்கி கொடுக்கும் வகையில் உள்ளது.

ஏற்கனவே நவபாஷாண முருகன் சிலையை திருட முயன்றது, உற்ஸவர் தங்கச்சிலை செய்ததில் நடந்த ஊழல்கள் என தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகிறது.தற்போது கும்பாபிேஷக பணிகள் நடக்கும் நிலையில் பச்சை மரகத லிங்கத்தை கடத்துவதற்கு முயற்சிகள் நடப்பதாக சந்தேகிக்கிறோம். போகர் ஜீவசமாதி கதவை உடைத்த அறநிலையத்துறை பணியாளர்கள் மீது விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக தொண்டர்களுடன் இவர் டி.ஆர்.ஓ., லதாவிடம் மனுவும் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !