திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா : ரதங்கள் சீரமைக்கும் பணி மும்முரம்
வில்லியனுார்:திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உற்சவர்களின் ரதங்கள் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா நாளை மறுநாள் (3ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.முக்கிய விழாவாக வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 7:15 மணியளவில் கவர்னர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். தேர் திருவிழாவை முன்னிட்டு ரூ. 5 லட்சம் செலவில் தேருக்கு புதிய வடம் வாங்கப் பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உற்சவர்களுக்கான ரதங்கள் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.6ம் நாள் உற்சவத்திற்கான யானை வாகனத்திற்கு செப்புத் தகடு பொருத்துவது, காமதேனு, மயில், குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை புதுப்பித்து, வண்ணம் தீட்டும் பணி ஜோராக நடந்து வருகிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் உற்சவதாரர்கள், சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.