பிரசித்தி பெற்ற தேவதானம் நாகமலை முருகன் கோயில் மயில் சிலை திருட்டு
தளவாய்புரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டின் கீழ் வரும்
நாக மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரே வைக்கப்பட்டிருந்த மயில் சிலை திருடப்பட்டுள்ளது. தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் ரோட்டில் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் உப கோயிலாக நாகமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோயில் அர்ச்சகராக வண்ணமுத்து உள்ளார். முருகன் கோயில் கருவறை மற்றும் மண்டபத்திற்கு வெளியே தனிப்பீடத்தின் மேல் மயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. பாதுகாப்புக்காக கம்பி வேலி அமைத்து மேல்பகுதி திறந்தபடி இருந்தது. இந்நிலையில் ஒரு அடி உயரமுள்ள மயில் சிலை பீடத்தை விட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு திருடு போயிருந்தது. இதுகுறித்து, கோயில் அறங்காவலர் கலாராணி புகாரின் பேரில் சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே பாதுகாப்பற்ற இம்மலைக்கோயிலில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் அட்டகாசம் தொடர்வதால் சி.சி.டி.வி, போதிய மின்விளக்கு போன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும், என இப்பகுதி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.