எங்கே செல்கிறது கோவில் உண்டியல் பணம்
மதுரையில் சமீபத்தில் நடந்த துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், கோவில் உண்டியலில் பணம் போட வேண்டாம்; அந்த பணம் எங்கோ செல்கிறது என்று கூறியிருந்தார்.
கோவில் உண்டியல் பணம் எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:
பொதுவாக கோவில் உண்டியல் பணம், சில மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு, முழுதுமாக எண்ணப்பட்டு, அறநிலையத் துறை அதிகாரிகளால், கோவில் அறங்காவலர் அல்லது செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அவர், கோவிலின் வங்கிக் கணக்குகளில், அறங்காவலர் இயக்கக் கூடிய முதலாம் கணக்கில் போடுவார். அன்னதானம், கோசாலை இவைகளுக்கு வைக்கப்படும் சிறப்பு உண்டியல் பணத்தை, அதற்கான வங்கிக் கணக்கில் போட வேண்டும். இதன் பின் தான் பிரச்னை வருகிறது. பல கோவில்களில் உண்டியல் வருமானம் தான், அந்தக் கோவிலின் ஆதாரமாக உள்ளது. பழநி, சமயபுரம், திருச்செந்துார் கோவில்களில், மிக அதிக அளவில் உண்டியல் வருமானம் உள்ளது. கோவிலின் வருமானம், அந்தக் கோவில் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அதற்காகத் தான் செலவழிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
அதாவது, ஒரு சைவ கோவில் என்றால், பூஜை, உற்ஸவங்கள், கும்பாபிஷேகம்; அர்ச்சகர், ஓதுவார், பரிசாரகர், இசைவாணர் ஆகியோருக்குச் சம்பளம்; சைவ சமயம் சார்ந்த தர்மங்கள், பிரசாரங்கள் செய்யலாம். அப்படி செய்யும்போது பழக்க வழக்கங்களுக்கு மாறாக செய்யக் கூடாது. தற்போது, கோவில் உண்டியல் பணம், ஆணையர் அலுவலக செலவிற்கும், இணை ஆணையர் அலுவலக செலவிற்கும் அதிகமாக போகிறது. அமைச்சர் பயன்பாட்டிற்கும், துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கும் இன்னோவா கார்கள் வாங்கப்படுகின்றன. முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பூ அலங்காரம், செடி அலங்காரம் என, 2 லட்சம் ரூபாய், கோவில் உண்டியல் பணம் செலவாகிறது. சங்கரன்கோவில் உண்டியல் பணத்தை எடுத்து, ஆணையர் அலுவலகத்திற்கு, நகல் எடுக்கும் இயந்திரம் வாங்குகின்றனர். ஆணையர் அலுவலக கூட்டங்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி, டீ, காபி, முறுக்கு இவையெல்லாம் சென்னை கபாலீஸ்வரர் கோவில் உண்டியல் பணம்.ஆணையர் அலுவலகத்திற்கான குடிநீர் சப்ளைக்கு முறை வைத்து, வாரம் ஆறு நாட்களுக்கு, சென்னையில் உள்ள ஆறு கோவில்களின் உண்டியல் பணம் செலவு செய்கின்றனர்.கோவில் உண்டியல் பணத்தில் தான், ஆணையர் அலுவலகத்தில் 13 தட்டச்சுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.கோவில் பணம், கோவிலின் சம்பிரதாயமான விஷயங்களுக்குத் தான் செலவு செய்யப்பட வேண்டும்.அறநிலையத் துறைக்கும், துறை அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் செலவு செய்தால், சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -