ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: 4 தலைமுறையாக தொடரும் மரபு
நாமக்கல்: நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா, நான்கு தலைமுறைகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் முத்துக்குமார் தவுட்டு ஆலை அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு சொந்தமான, அன்னை காமாட்சியம்மன் வழிபாடு தலம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படும். 11வது ஆண்டாக கொண்டாடப்படும் இந்த விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு 9 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வருதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
தீர்த்தக்குடங்களை, திருமணமாகாத வாலிபர்கள் எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து, புற்றுக்கண்ணில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, ஸ்வாமி உருவம் செய்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கிடாவெட்டி, ஸ்வாமிக்கு பலி கொடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கும், வெளி நபர்களுக்கும் அனுமதியில்லை. பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த வினோத திருவிழாவில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மட்டுமே பங்கேற்று வருகின்றனர்.
இது குறித்து அச்சமூகத்தினர் சிலர் கூறியதாவது:
பல நூறு ஆண்டுளுக்கு முன், எங்கள் சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் போர் நடந்தது. அதில், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் இறந்தனர். அதை தொடர்ந்து, எங்கள் முன்னோர்கள் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினர். அதனால், காமாட்சி அம்மனை வழிபடும் போது, ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த வழிபாடு, நான்கு தலைமுறைகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாங்கள், இங்கு பத்து ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். இந்த திருவிழாவில், பெண்களுக்கும், வெளி நபர்களும் பங்கேற்க அனுமதி கிடையாது. இங்கு உணவு தயார் செய்யப்பட்டு, இங்கேயே பரிமாறப்படுகிறது. மீதமான சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. அதற்காக குழி தோண்டி, மீதமான சாப்பாட்டை கொட்டி மூடிவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.