பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய சப்பர பவனி, நேற்றிரவு மின்னொளியில் நடந்தது. வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக சிறப்புவாய்ந்த, இவ்வாலய 430ம் ஆண்டுத் திருவிழா, ஜூலை 26 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான, அன்னையின் பெருவிழா 11 நாளான நேற்று, கொண்டாடப்பட்டது. காலையில் சிறப்பு திருப்பலி, மதியம் நன்றி திருப்பலி நடந்தன. இரவு ஏழு மணிக்கு, மின்னொளியில் பனிமய மாதாவின் சப்பர பவனி நடந்தது. ஆலயத்திலிருந்து சப்பரத்தில் எழுந்தருளிய மாதாவின் திருவுருவம், செயின்ட் பீட்டர் ஆலய தெரு, பெரியகடை தெரு, டபிள்யூ.ஜி.சி., ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழி வலம் வந்து மீண்டும் ஆலயத்தில் சேர்ந்தது. மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ், பாதிரியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு திருவிழாவில், பனிமயமாதா, தங்கத்தேரில் பவனி வருவார் என தெரிவிக்கப்பட்டது.