சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுர கலசங்கள் அனுப்பல்
ப.வேலுார், நன்செய் இடையாறு அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் அக்னி மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவுக்கு கோபுர கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜ கோபுர கும்பாபிஷேக விழா, வரும் ஜூலை, 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்த ராஜகோபுரத்தில், ஏழு நிலைகளில் ஏழு கோபுர கலசங்கள் அமைய உள்ளன. நேற்று நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த, நன்செய் இடையாரில், இவற்றை நேர்த்திக்கடனாக, வழங்கும் நிகழ்வு நடந்தது. கோபுர கலசங்களை நன்செய் இடையாரைச் சேர்ந்த விவசாயிகள் பொன்னர், சங்கர் சகோதரர்கள் வழங்கினர். செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும்,
4.75 அடி உயரம் கொண்டவை. இந்த கலசங்கள் அனைத்துக்கும் நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் அக்னி மகா மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.