அந்தியூர் கோவில் விழாவில் குதிரை சந்தை இன்று ஆரம்பம்
அந்தியூர்: அந்தியூர், குருநாத ஸ்வாமி கோவில் விழாவை முன்னிட்டு, பிரசித்திபெற்ற குதிரை, மாட்டுச் சந்தை இன்று துவங்குகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில் ஆடித் திருவிழா, பூச்சாட்டுதலுடன் ஜூலை 18ம் தேதி துவங்கியது. 25ம் தேதி கொடியேற்றம், ஆகஸ்ட், 1ம் தேதி முதல் வன பூஜை நடந்தது. தேர்த்திருவிழா இன்று நடக்கிறது. இன்று காலை காமாட்சியம்மன் பல்லக்கிலும், பெருமாள் மற்றும் குருநாத ஸ்வாமி, "மகாமேரு எனப்படும், 60 அடி உயர தேர்களிலும், புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து புறப்படுவர். இங்கிருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ள வனத்துக்கு சென்று, அங்கு பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இன்று முதல் நான்கு நாட்களுக்கு இவ்விழா கோலாகலமாக நடக்கும்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, பிரசித்தி பெற்ற குதிரை, மாட்டுச்சந்தை இன்று துவங்குகிறது. சந்தைக்காக நேற்று முதலே வெளியூர், வெளிமாநில பக்தர்களும், கால்நடைகளை விற்கவும், வாங்கவும் வந்த விவசாயிகள், வியாபாரிகள் அந்தியூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள், பழக்கடைகள், தின்பண்டக் கடைகள் ஆகியவை, அந்தியூரில் இருந்து புதுப்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைக்கும் கால்நடைகள் நேற்று வரத்துவங்கின. பல்வேறு இனக் குதிரைகள், காளைகள், பசு மாடுகள், எருமைகள், வித்தியாசமான தோற்றமுடைய ஆடுகள், கோழி இனங்கள், கிளி, பூனை, நாய் போன்றவை சந்தையில் விற்பனைக்கு குவியும். இதுதவிர, கால்நடைகளுக்கான சலங்கை, சாட்டை, கழுத்து மணி, தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு, குதிரைகளுக்கான சேணம், கயிறு போன்றவை விற்கும் கடைகளும் அதிகம் இருக்கும். இவற்றை வாங்கவும், காணவும் அடுத்த நான்கு நாட்களுக்கு ஏராளமானோர் அந்தியூரில் குவிவர்.