பத்மநாப சுவாமி ஏ அறை பொக்கிஷங்கள் மதிப்பீடு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்!
புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின், பாதாள அறை, "ஏயில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, குறைந்த பட்சம் ஆறு மாதமாகும் என, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில், ஏராளமான தங்க, வைர, வைடூரிய நகைகளும், ரத்தினங்களும் உள்ளன. இவற்றை மதிப்பீடு செய்ய, நீதிபதி கிருஷ்ணன் தலைமையில், கண்காணிப்புக் குழுவையும், டாக்டர் வேலாயுதன் நாயர் தலைமையில், உயர் மட்டக் குழுவையும், சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது.இக்குழுவினர் கோவிலில் மொத்தமுள்ள ஆறு பாதாள அறைகளில், எப், இ, டி, சி, ஆகிய நான்கு அறைகளில் உள்ள பொக்கிஷங்களை, முதல் கட்டமாக மதிப்பீடு செய்து முடித்தனர்.ஜூன் 5ம் தேதி ஏ அறையை திறந்து, அதிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை துவக்கினர். இந்த மதிப்பீடு பணிக்கு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நவீன கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. "ஏ அறையில், தங்க, வைர, வைடூரிய நகைகளும், ரத்தினங்களும், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளும் அதிக அளவில் உள்ளதால், ஒவ்வொரு நகை மற்றும் கல்லின் தன்மை, எடை, அது எந்த காலத்தைச் சேர்ந்தது போன்ற பல்வேறு விவரங்களைச் சேகரிக்கும் பணியில், மதிப்பீடு மற்றும் வல்லுனர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதனால், இவற்றை எல்லாம் மதிப்பீடு செய்து முடிக்க ஆறு மாதமாகும். பாதாள அறைகளில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல், சமீபத்தில், ஐந்தாவதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.