வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ஆலாந்துறை: பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், ஆனி உத்திர திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடந்தது.
சிவ தலங்களில், ஆண்டுதோறும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று, திருமஞ்சனம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடக்கும். பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 11:00 மணிக்கு, கனக சபை மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்பாளுடன் எழுந்தருளினார். நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 21 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. திருமஞ்சன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும், திருமஞ்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.