திருக்கோஷ்டியூர் திருவாடிப்பூர உற்ஸவம்: நாளை கொடியேற்றம் ஆக.1ல் ஆடித் தேரோட்டம்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நாளை திருவாடிப் பூர உற்ஸவம் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருஆடிப்பூ உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். இன்று மாலை 5:42 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். நாளை காலை 7:16 மணிக்கு மேல் பெருமாள் ஆண்டாளுடன் கல்யாண மண்டபம் எழுந்தருளுவார். தொடர்ந்து சக்கரத்தாழ்வார், கொடிப் படம் திருவீதி வலம் வந்து கோயிலுக்கு வருவர். பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து காலை 11:00 மணி அளவில் கொடியேற்றம் நடக்கும். அடுத்து கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்து பூஜைகள் நடைபெற்று தீபாரதானை நடக்கும். இரவில் ஆண்டாள், பெருமாள் திருவீதிப் புறப்பாடு நடைபெறும். தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் ஆண்டாள், பெருமாள் வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். ஆக.1ல் பத்தாம் திருநாளில் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும்.