உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் குவிந்திருந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டதால் அதிகாலை 04:45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நுழைவு கட்டணம் வசூலித்தால் மிகவும் கால தாமதம் ஏற்படும் என்பதால் நேற்று வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூலிக்கவில்லை. மதியம் 03:00 மணி வரை சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக ஓடையில் ஓரளவிற்கு நீர் வரத்து இருந்தது. இதனை பக்தர்கள் கடந்து செல்வதை வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கண்காணித்தனர். மேலும் செல்லும் வழித்தடம் ஈரமாக இருந்ததால் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வதில் சிரமத்தை சந்தித்தனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலையடிவார தோப்புகளில் தங்கி மொட்டை போட்டனர். தனியார் தோப்புகளின் தண்ணீர் தொட்டிகளில் முழு அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி குளித்தனர். தாணிப்பாறை தனியார் மடங்கள் இடைவிடாமல் பக்தர்களை அழைத்து, அன்னதானம் சாப்பிட செய்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தத சுவாமிகளை தீபாராதனை ஒளியில் பக்தர்கள் தரிசித்தனர்.  விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா மற்றும் அறநிலை துறை அலுவலர்கள் செய்திருந்தனர். கோவில்பட்டி விருதுநகர் மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை சார்பில் மினி மருத்துவமனை மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். கடந்த நான்கு நாட்களாக வானிலை மையத்தின் சார்பில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தினமும் மாலை 4:00 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் முன்கூட்டியே சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். நாளை (ஜூலை 30) மதியம் 3 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !