இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா!
புலிப்பால் கொண்டு வந்தால் தான் தலைவலி குணமாகும் என ஐயப்பனின் அம்மா சொன்னாளே! அதேபோல, ஒரு மகாராஜாவுக்கு வயிற்றுவலி குணமாக கரடிப்பால் வேண்டுமென சொல்லிவிட்டார் வைத்தியர். கரடியிடம் பால் கறப்பதென்றால் சும்மாவா! லட்சம் பொற்காசு தரப்படும் என முரசறையப்பட்டது. அவ்வூரிலுள்ள நான்கு இளைஞர்கள், நாங்கள் போகிறோம், எனகாட்டுக்குச் சென்றனர். ஒரு கரடியை லாவகமாகப் பிடித்தும் விட்டனர். கரடிக்கு பயம். வேண்டுமளவு பால் கறந்து விட்டு, நம்மை அடித்தே கொன்று விடுவார்கள். இவர்களிடம் இருந்து தப்பித்தாக வேண்டுமென, அந்த இளைஞர்களிடம், லட்சம் தங்கக்காசை பிரித்தால் ஆளுக்கு 25 ஆயிரம் தான் வரும். இதெல்லாம் என்ன ஜுஜுபி...என்னுடன் வாருங்கள். தங்கச்சுரங்கத்தையே காட்டுகிறேன். வேண்டுமளவு அள்ளிச்செல்லுங்கள், என்றது. ஆசை யாரை விட்டது? நம்ம ஆ(ø)சாமிகள் கரடியின் பின்னால் சென்றனர். அது அவர்களை ஒரு பள்ளத்தில் இறங்கச் சொன்னது. இதற்குள் போங்க புதையல் இருக்குது, என்றது. இளைஞர்கள் உள்ளே இறங்கியதும், ஒரு குகை போல் தென்பட்டது. இவர்களின் சப்தம் கேட்டு உள்ளே படுத்திருந்த சிங்கம், புலியெல்லாம் பாய்ந்து வந்தன. நாலுபேரும் அவற்றுக்கு இரையாகி விட்டனர். இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா இப்படித்தான்!