கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே அறநிலையத் துறைக்கு குட்டு
சென்னை:கோவில் சொத்தை, அறநிலையத் துறை சொத்தாக கருதக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு: கோவில்களுக்கு நன்கொடையாக, சொத்துக்களை பக்தர்கள் அளிக்கின்றனர். அதனால், கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக கருத முடியாது. அவை எல்லாம் கோவில் சொத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால், தங்களின் சொத்துக்களாக அறநிலையத் துறை கருதுகிறது. அறங்காவலர்களுடன் ஆலோசிக்காமல், கோவில் சொத்துக்களின் உரிமையை மாற்றுகின்றனர். அறங்காவலர்களின் ஒப்புதல் இன்றி, கோவில் சொத்துக்களை மாற்றம் செய்யக் கூடாது; கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக, கோவில்களை அறநிலையத் துறை கோவில்களாக உரிமை கோருவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஹிந்து அறநிலையத் துறை சட்டத்தில், கோவில் மற்றும் மத அறக்கட்டளைகள் தொடர்பாக, கமிஷனருக்கு உள்ள அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. கோவிலுக்கு அவசியமானதாக, பயனுள்ளதாக இருந்தால் ஒழிய, கமிஷனரின் ஒப்புதல் இன்றி, கோவில் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு, வாடகைக்கு என மாற்ற முடியாது.உதாரணத்துக்கு, கோவிலுக்கு சொந்தமான நிலம் அல்லது கட்டடத்தை, ஐந்து ஆண்டு களுக்கு மேல் குத்தகை விட்டு வாடகை ஈட்டினால், அதை பயனுள்ளதாக கூற முடியும்.அறநிலையத் துறை கமிஷனர் ஒப்புதல் வழங்குவதற்கு முன், அந்தச் சொத்து தொடர்பாக ஆட்சேபனைகள், பரிந்துரைகளை பெற வேண்டும். ஆட்சேபனைகளை, கோவில் அறங்காவலர்கள் மட்டுமின்றி, அதில் ஆர்வம் உடைய மற்றவர்களும் தெரிவிக்கலாம். அவற்றை, கமிஷனர் பரிசீலிக்க வேண்டும். எனவே, சொத்துக்களை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதற்காக மாற்றம் செய்ய வேண்டுமானாலும் கூட, தேவைப்படும்போது பயன் ஏற்படுகிறது என்றால் மட்டுமே, கமிஷனர் அதை மேற்கொள்ளலாம்.அதேநேரத்தில், சொத்து மாற்றம் தொடர்பாக, ஆட்சேபனைகள், பரிந்துரைகள் கோரி விளம்பரம் வெளியிடும்போது, அறங்காவலர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். கோவில் சொத்தில் மாற்றம் மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரம் இருக்கும் வேளையில், அந்தச் சொத்தை, அறநிலையத் துறையின் சொத்தாக கருதக் கூடாது; அது கோவில் சொத்து தான். சொத்து மாற்றத்தை, அறநிலையத் துறை சட்டப்படியே மேற்கொள்ள முடியும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.