சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் பாலாலய விழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்குவதற்கான பாலாலய விழா நேற்று நடந்தது. சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து சித்துக்கலை மூலம் நல்வினைகள் புரிந்து உயிரோடு ஜீவசமாதி ஆனவர் சித்தர் முத்துவடுகநாதர். அவர் ஜீவசமாதி ஆன இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.
இக்கோயிலுக்கு 1996 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு நேற்று பாலாலயம் நடந்தது. காலை 6:00 மணிக்கு 9 புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாக பூஜைகளை சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து 10:30 மணிக்கு சித்தர் முத்துவடுகநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் சித்தர் முத்து வடுகநாதரின் வாரிசுதாரர்கள், வணிகர் நலச் சங்கத்தினர், கோயில் கட்ட நிலம் வழங்கியவர்கள், கிராமத்தினர், கோயில் பூஜகர்கள் பங்கேற்றனர்.