காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு
காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில், அம்மன் குளம், குடிநீர் ஊரணியை சுற்றிலும் இறைச்சி கடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கோயில் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை ஹிந்து அறநிலையத்துறையினர் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த 2021 பிப்., 10ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. இது குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர் மதுசூதன் ரெட்டிக்கு புகார் அளித்துள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாததால் காலையில் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் போது, ஆடுகளை அறுத்து ரத்தத்தை ரோட்டில் விடுகின்றனர். இது பக்தர்களை முகம் சுழிக்க செய்கிறது. கோயில் தெப்பக்குளமும் அசுத்தமாக உள்ளது. இவற்றை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் அளித்தனர்.