சாத்துார் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED :1208 days ago
சாத்துார்: சாத்தூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில்கள் பலநூறு ஆண்டுகள் பழமையானது. இக் கோயில்கள் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த பல வருடங்களாக இரு கோயில் களின் அம்மன் சன்னிதி கோபுரத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இக்கோபுரங்கள் சுதை சிற்பங்களால் ஆனது. தற்போது சுதை சிற்பங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. களை இழந்து காணப்படும் கோபுரத்தை பார்க்கும் பக்தர்கள் மிகுந்த மன வேதனைப்படுகின்றனர். சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து பல வருடங்கள் ஆகும் நிலையில் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.