அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா துவக்கம்
தாடிக்கொம்பு: தாடிக்கொம்புவை அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாட்டுதல் பெற்று நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் புராண நாடகங்களும் நடைபெற்று வந்தன. மேலும் அந்நாட்களில் அம்மனின் உற்சவர் மற்றும் பண்டார பெட்டி ஆகியவை கொழுமண்டபத்திற்கு எழுந்தேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
கண் திறப்பு நிகழ்ச்சி: இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களால் போற்றப்படுவது அம்மனின் கண் திறப்பு நிகழ்ச்சி ஆகும். அம்மனின் பிறப்பு மண்டபத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ கால அம்மன் கண் திறப்பு மண்டபத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டார். அங்கு நேற்று காலை சுமார் 10 மணி அளவில் அரசு உயர் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அம்மனின் கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. அம்மனின் கண் திறப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆமன் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் மிதந்தபடி உற்சவ கால அம்மன் கொழுமண்டபத்திற்கு எழுந்தருளினார். சிறப்பு மண்டகப்படி மற்றும் பூஜைகளுக்கு பின்னர் அம்மனை தரிசிக்க பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். அம்மன் கொழுமண்டபத்திற்கு வந்த பொழுது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த நெல் கம்பு சோளம் மக்காச்சோளம் வாழைப்பழம் உள்ளிட்டவற்றை சூறையிட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மேலும் அம்மனுக்கு காணிக்கையாக கோழிகள் மற்றும் ஆடுகளை கோவிலுக்கு வந்து செலுத்தினர்.
இத்திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் குழந்தை வரத்திற்காக வேண்டியவர்கள் தங்களின் குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுமார் 12 மணி வரை கொழுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன் புஷ்ப விமானத்தில் அங்கிருந்து கிளம்பி வானக் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மிகப்பிரமாண்டமான வகையில் விடிய விடிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று மதியம் ஒரு மணி வரை வானக் காட்சி மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.