உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாழ்வு தரும் மகாதேவர்

மணவாழ்வு தரும் மகாதேவர்

பிரிந்த தம்பதியர் சேரவும், மகிழ்ச்சியான மணவாழ்வு அமையவும் வேண்டுமா... வாருங்கள் கேரளா பெருவனம் இரட்டையப்பன் கோயிலுக்கு...

ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் பூரு மகரிஷி தவமிருந்தார். மகிழ்ந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளித்து சிவலிங்கம் ஒன்றை கொடுத்தார்.  அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரல்களால் மூன்று கோடுகளை தரையில் இட்டு குளம் ஒன்றை உருவாக்கினார் மகரிஷி.  அது தொடுகுளம் எனப்பெயர் பெற்றது. குளத்தில் நீர் வற்றினால் இன்றும் அக்கோடுகளைக் காணலாம்.  ஒரு முறை மகரிஷி  நீராடச் செல்லும் போது லிங்கத்தை அருகிலுள்ள ஆலமரத்தின் மீது வைத்தார்.  திரும்பி வந்த போது அதனை எடுக்க முடியவில்லை. அதன்பிறகு படிகள் அமைத்து அதன் மீதேறி சிவபெருமானை வழிபட்டார். இப்போதும் இந்தப்படிகள் வழியே சென்று மூலவரை தரிசிக்கலாம். பூருமகரிஷி தவம் செய்ததால் இத்தலம் பூருவனம் என அழைக்கப்பட்டு பின்னர் பெருவனம் என்றானது.

இங்கு பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. ஒரே கோயில் வளாகத்தில் இரு சிவன் சன்னதிகள் இருப்பதால் இதனை இரட்டையப்பன் கோயில் என்கின்றனர்.  மூன்றடுக்குக் கோபுரங்கள் உள்ளன.  இங்கு சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். கருவறை உயரமான இடத்தில் இருப்பதால் மாடத்திலப்பன், மகாதேவர் என்றும்  அழைக்கின்றனர். பார்வதிதேவி, தட்சிணாமூர்த்தி, கணபதி, கிருஷ்ணன், சாஸ்தா சன்னதிகள் உள்ளன.  தினசரி ஐந்து காலபூஜை நடக்கிறது. திருமணத்தடை அகலவும், பிரிந்த தம்பதியர் சேரவும், புதிய தொழில் தொடங்கவும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.  கேரளக் கோயில்களில் பூரம் திருவிழா நடக்க இக்கோயிலே மூலக்கோயில்.  இப்பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழா தொடங்கும் முன்பு இங்கு அனுமதி பெறுவது வழக்கம்.   

எப்படிச்செல்வது
திருச்சூரிலிருந்து திர்ப்பறையார் செல்லும் வழியில் 11 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !