கள்ளழகர் கோயில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்த கும்பல்
விருதுநகர் : மதுரை கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி, முன்பணமாக, 70 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த ஆறு பேர் கொண்ட கும்பலிடம், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர், சூலக்கரை மேடு, வீரப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கநாயகி. இவரது தம்பி சூரியநாராயணன் சிங்கப்பூரில் தொழில் செய்கிறார். அவர் அனுப்பும் பணத்தில் ரெங்கநாயகி இரு இடங்கள் வாங்கினார். ரெங்கநாயகியையும், அவரது மற்றொரு சகோதரரான வீரபாண்டியனையும், 2020ல் சூலக்கரை வீட்டில் ஓய்வு நீதிபதி என கூறிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம், பழநி சிவகரிபட்டியைச் சேர்ந்த பத்மநாபன் சந்தித்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், மதுரை வண்டியூரில், 12 ஏக்கர், 70 சென்ட் நிலம் ஸ்ரீநாச்சாரம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது என்றும், அதன் நிர்வாகிகளான குழந்தை செல்வம், சந்திரன் தனக்கு பவர் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
அதை வாங்கிக் கொள்ள ஆசை காட்டினார். அப்போது, அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து வாருங்கள்; பேசி கொள்ளலாம் என, ரெங்கநாயகி கூறி உள்ளார். கடந்த, 2021 ஜனவரியில் பத்மநாபன் மகன் சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் சொத்தில் வில்லங்கம் இல்லை என்று கூறி, 34 கோடியே, 92 லட்சத்து, 50 ஆயிரம் என கிரையம் பேசி, 50 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டனர். சில நாட்கள் கழித்து, 20 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனாலும், நிலத்தை பதிவு செய்து தராமல் ஏமாற்றி வந்தனர். சந்தேகமடைந்த ரெங்கநாயகி விசாரித்த போது, அந்த இடம் ஹிந்து சமய அறநிலையத்துறையின், மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என, தெரிந்தது. ரெங்கநாயகியும், வீரபாண்டியும், பணத்தை திரும்ப கேட்ட போது, 10 நாட்களில் தருவதாக கூறினர். மீண்டும் கேட்ட போது, திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.