உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துணவுக்காக புதுச்சேரி கோவில் யானை லட்சுமிக்கு 15 நாள் ஓய்வு

புத்துணவுக்காக புதுச்சேரி கோவில் யானை லட்சுமிக்கு 15 நாள் ஓய்வு

புதுச்சேரி: புத்துணர்வுக்காக மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு 15 நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில், தமிழக கோவில் யானைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 48 நாட்கள் புத்துணவு முகாம் நடத்தப்பட்டு வந்தது. எடப்பாடி ஆட்சி காலம் வரை நீடித்த இந்த முகாம், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று புத்துணர்வு பெற்று திரும்பும். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால், இந்தாண்டு கோவில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை அறிவுறுத்தல் படி லட்சுமிக்கு, அது தங்கியுள்ள வேதப்புரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில், 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு காலத்தில் லட்சுமி மணக்குள விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்படாது. மேலும் பார்வையாளர்கள் யாரும் பார்க்கவும் முடியாது. அது மட்டுமின்றி அதன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழ வகைகள் தவிர்க்கப்பட்டு, அரிசி சாதம், களி, கூந்தல் பனை, தென்னை மட்டை, ஆல,அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் ஓய்வில் இருந்து வரும் 32 வயதுடைய லட்சுமியை தமிழக வனத்துறை மருத்துவர்கள் வந்து பார்வையிட்டு பின்னர், நவம்பர் 17ம் தேதி கோவிலுக்கு திரும்ப உள்ளது. அதுவரை எவ்வித தொந்தரவும் இன்றி தனிமையில் 15 நாள் ஓய்வில் லட்சுமி இருந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !