சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் மலைக்கோயிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தளினர்.
தொடர்ந்து இரவு வீதியுலா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 29ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை காலை படிச்சட்டத்திலும் இரவு பலவிதமான வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. திருக்கார்த்திகை தினத்தனமான டிச.6ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்றிரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, கார்த்திகை தீபம் ஏற்றியும் கோயில் சன்னதியில் சொக்கப்பானை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. டிச.7 தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.