உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை காலை தொடங்கி நள்ளிரவு வரை நடந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்

திருவண்ணாமலை காலை தொடங்கி நள்ளிரவு வரை நடந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபதிருவிழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், காலை தொடங்கி நள்ளிரவு வரை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், கொரோனா கட்டுப்பாட்டால் இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடக்காத நிலையில், நடப்பாண்டு பஞ்ச மூர்த்திகள் மஹா ரத தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, பஞ்ச உற்சவ மூர்த்திகளான விநாயகர், 31 அடி  உயர தேர்; வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், 41 அடி உயர தேர்; உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், 59 அடி உயர மஹா ரதம்; பராசக்தி அம்மன், 46 அடி உயர தேர்; சண்டிகேஸ்வரர், 26 அடி உயர தேருக்கு எழுந்தருளினர். காலை, 6:40 மணிக்கு, விநாயகர் தேர் ஊர்வலத்தை, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ‘அண்ணாமலையாருக்கு  அரோகரா’ பக்தி கோஷம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்று, மாடவீதி வலம் வந்தனர். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர், 10:40 மணிக்கு நடந்தது. மதியம், 3:40மணிக்கு,  உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மஹா ரத ஓட்டத்தை, சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி வடம் பிடித்து துவக்கி வைத்தார். மஹா ரத தேர் வடத்தை ஒரு பக்கம் ஆண்களும், மற்றொரு பக்கம் பெண் பக்தர்களும், கைலாய வாத்திய இசை முழங்க, பிடித்து இழுத்து சென்றனர். இதையடுத்து பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர், என ஐந்து தேர்களும் அடுத்தடுத்து நள்ளிரவு வரை வீதியுலா சென்றது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரம் முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு பணி பலப்படுத்தப் பட்டுள்ளது. தீப திருவிழாவால் திருவண்ணாமலை நகர் விழாக்கோலம் பூண்டு, பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !