திருமலைகேணி சுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபம்
 கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை விழா நடந்தது. முன்னதாக மூலவர் சுப்பிரமணியசாமிக்கு நெய், பால், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொண்டு 21 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் முருகனுக்கு அபிஷேகம் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் 1008 லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து மாலை பள்ளத்தில் சுப்பிரமணியசாமி மேளதாளம் முழங்க பக்தர்கள் அரோகரா கோஷமிட கோவிலை சுற்றி வந்தார். இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, செந்துறை, கோபால்பட்டி, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறக்கையாளர் அழகு லிங்கம், செயல் அலுவலர் சுகன்யா செய்திருந்தனர்.
நத்தம்: நத்தம் கைலாசநாதர் கோவிலில் காலை பால தண்டாயுதபாணி சாமிக்கு கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில்பட்டி பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோவிலில் விளக்கேற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோவிலில் பெண்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.