வியக்க வைத்த மயான கொள்ளை உத்சவம் நேர்த்திக்கடன் நிறைவேற்றி பக்தர்கள் பரவசம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், மயான கொள்ளை உத்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள், ‘கிரேன்’ வாகனம் இழுத்தல், வாகனத்தில் அந்தரத்தில் தொங்குதல், முதுகில் கொக்கி செலுத்தி கல் தேர், மரத்தேர், ஆட்டோ, வேன் இழுத்தல் ஆகியவற்றை செய்தபடி ஊர்வலமாக சென்று, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உத்சவம், நேற்று முன்தினம் நடந்தது. காலை முதல், பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இரவு 7:00 மணியளவில் ஓ.எம்.ஆர்., சாலையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா துவங்கி, படூர் புறவழிச் சாலை வழியாக மயானத்தை சென்றடைந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் காய்கறிகள், பழங்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். மேலும், பக்தர்கள் விரதம் இருந்து ‘கிரேன்’ வாகனத்தில் அந்தரத்தில் தொங்குதல், முதுகில் கொக்கி செலுத்தி கல்தேர், மரத்தேர், ஆட்டோ, வேன் இழுத்தல் ஆகியவற்றை செய்தபடி ஊர்வலமாக சென்று, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில், புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, மயான கொள்ளை விழாவையொட்டி, அம்மன் அலங்காரம் வீதியுலாவின் போது, நேர்த்திக்கடனாக தேர் இழுத்தல், அக்னி சட்டி எடுத்தல், காளி, குறத்தி வேடம் உள்ளிட்ட வைபவங்களுடன், பழவேலி பாலாற்றில் மயான உத்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணிக்கு, அம்மன் வீதியுலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை, பர்வதராஜகுல மரபினர்கள் செய்திருந்தனர்.
மறைமலை நகர்: செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி, காளி வேடமிட்ட பக்தர்கள் கோவிலில் இருந்து பாலாற்று பகுதியில் உள்ள சுடுகாடு வரை ஆடி வந்தனர். அவர்களின் பின்னே, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடன்களாக தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், ஆட்டோ, டிராக்டர், கார், லாரி, உள்ளிட்ட வாகனங்களை தங்களின் முதுகில் அலகு குத்தி இழுத்துச் சென்றனர். இதில் செங்கல்பட்டு, பாலுார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். அதே போல மறைமலை நகர் அடுத்த, கலிவந்தபட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை விமரிசையாக நடைபெற்றது. இதில், மறைமலை நகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.