உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: நாரலப்பள்ளி அருகே, 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி, நாரலப்பள்ளியிலிருந்து வேப்பனஹள்ளி சாலையில், 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்யாண குண்டு என்ற இடத்தில் உள்ள பாறையில், 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த பாறை ஓவியங்கள், இறந்தவர்களின் நினைவாக வரையப்பட்டவையாகும். இறந்த மனிதர்கள் இருவரின் உருவங்கள் வரையப்பட்டு, அவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகளும் அருகருகே வரையப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஒரு நிகழ்வில் இறந்ததால் வரையப்பட்டுள்ளது. மேலும், விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியமும் வரையப்பட்டுள்ளது. ஓவியத்தின் எல்லைகளை குறிக்கும் வகையில் குறியீடுகளும் உள்ளன. மீன் எலும்புகள் போன்று ஒரு ஓவியமும், ஒரு வட்டம் வரைந்து, பூவிதழ்கள் போன்று ஒரு ஓவியமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பிராமி எழுத்துக்கள் ய, ப, ம, கு போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக்களாக இருப்பின், அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வரலாற்று ஆசிரியர் ரவி, சரவணகுமார், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !