பழநியில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
பழநி: பழநியில் ஐயப்ப பக்தர்கள், விடுமுறை நாள் முன்னிட்டு மலைக் கோயிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநியில் மலைக் கோயிலுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா வெளி மாநிலத்திலிருந்து அதிக அளவில் தனியார் வாகனங்களில் வந்தனர். வெளியூர், வெளி மாநில முருக பக்தர்கள் வருகையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிக அளவில் இருந்தது. மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால், கிரி வீதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அருள்ஜோதி வீதி, அய்யம்பள்ளி ரோடு சன்னதி வீதி பூங்கா ரோடு ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.