ஆரியங்காவு தர்ம சாஸ்தா புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ஆரியங்காவு : கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாண்டியன் முடிப்பு என்ற நிச்சயதார்த்த உற்ஸவம் நடந்தது. கேரள, தமிழக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தர்ம சாஸ்தா சபரிமலையில் சன்னியாசியாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், ஆரியங்காவில் கிரகஸ்தனாகவும், அச்சன்கோவிலில் வன அரசராகவும் அருள்பாலிக்கிறார். ஆரியன்காவில் அன்னதானப் பிரபுவான தர்மசாஸ்தா, புஷ்கலா தேவியின் பக்தியை மெச்சி அவரை தன்னுடன் ஐக்கிய படுத்திக் கொண்டதாக ஐதீகம். இவர் சவுராஷ்டிரா குல தேவி என்பதால் இங்கு நடைபெறுகின்ற திருமண சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சவுராஷ்டிரா சமூக குல முறைப்படி நடக்கிறது. திருக்கல்யாண உற்ஸவத்தை திருவாங்கூர் மன்னர், தேவஸ்வம் போர்டு, ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கத்தினர் இணைந்து நடத்துகின்றனர். இந்தாண்டு திருக்கல்யாண உற்ஸவம் டிச., 24ல் கேரள மாநிலம் மாம்பழத்துறையில் அம்மனின் ஜோதி ரூப தரிசனத்துடன் துவங்கியது. ஆரியங்காவில் நேற்று மாலை 5:00 மணிக்கு "தாலப்பொலி ஊர்வலம்" என்ற மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் பாரம்பரிய உடை அணிந்த மலையாள பெண்கள், குழந்தைகள் குருத்தோலை, விளக்குகளை ஏந்தி கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தம்: நேற்றிரவு 8:00 மணிக்கு ராஜக்கொட்டார அரங்கில் நிச்சயதார்த்தம் நடந்தது. பகவான் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு கோயில் நிர்வாக அதிகாரியும், அம்பாள் சார்பில் சங்கத் தலைவர் டி.கே.சுப்பிரமணியனும் பிரதிநிதியாக இருந்து "பாண்டியன் முடிப்பு எனும் பண முடிப்பை" மாற்றிக் கொண்டனர். சங்க பொது செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் நிச்சயதார்த்த சடங்குகளை நடத்தினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் முன்னிலை வகித்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் எஸ்.எஸ்.ஜீவன் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர் கே.ஆர்.ராகவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஆரியங்காவு அட்வைஸ்சரி கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ண பிள்ளை, செயலாளர் சுஜாதன் ஏற்பாடுகளை செய்தனர். சவுராஷ்டிரா சமூக சம்மந்தி மக்களுக்கு தேவசம்போர்டினர் மூன்று நாட்கள் "விருந்து" அளித்தனர்.