முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பக்தர்களுக்கு ஆசி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் 46வது மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மார்கழி 18ம் நாள் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மண்டல பூஜையும் 108 சங்காபிஷேகமும் நேற்று நடந்தது. மண்டல பூஜையன்று ஸ்ரீலஸ்ரீ நாகராணி அம்மையார் கருவேல முள், உடை முள், கற்றாழை முள் உள்ளிட்ட முள்களை ஏழு அடி உயரத்திற்கு பரப்பி அதில் 48 நாட்கள் விரதமிருந்து அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். நேற்று பிற்பகல் 1:20 மணிக்கு மண்டல பூஜையை அடுத்து முள் படுக்கையில் பெண் சாமியார் ஆசி வழங்கினார். பின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. வரும் 15ம் தேதி பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. மண்டல பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.